இந்தியா வருகிறார் எலான் மஸ்க்? குஜராத்தில் உற்பத்தி ஆலையை திறக்க டெஸ்லா திட்டமா?
குஜராத்தில் இந்த மாதம் மாபெரும் அளவிலான வர்த்தக மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனம், எக்ஸ் நிறுவன அதிபரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது, இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலாவது உற்பத்தி ஆலையை குஜராத்தில் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் உத்திசார் மேம்பாடு துறை மற்றும் அதன் வணிகச் சூழல் பிரிவு மற்றும் உத்திசார்ந்த அமைவிட பிரிவு ஆகியவை இணைந்து, டெஸ்லா நிறுவனம் எங்கு அமைய வேண்டும் என்ற இடத்தை முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் சனாதத், தோலேரா, பெகராஜி உள்பட பல்வேறு இடங்களை பரிந்துரைப் பட்டியலில் மாநில அரசு முன்வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் கார் உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் விதமாகவும், இங்கிருந்து சர்வதேச தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையிலும் டெஸ்லா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள இலக்கை அடைய இந்த முயற்சி உதவியாக அமையும் எனத் தெரிகிறது.
முன்னதாக, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி கிளையை அமைப்பது தொடர்பாக அவ்வப்போது யூகமான செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால், நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்திய அரசு மற்றும் டெஸ்லா நிறுவனம் இடையே சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், அது தாமதம் அடைந்து வந்ததாக தெரிகிறது