‘இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்த பவுலர் அவசியம்…’ – முன்னாள் வீரர் ஆலோசனை
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்வது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ள கருத்து கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை 50 ஓவர் போட்டி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இந்திய அணி ஃபைனலில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக அமைந்தது.
இதேபோன்று முன்பு நடைபெற்ற 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்ற இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பை எதையும் வெல்லவில்லை.
இந்நிலையில் வரும் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளது. இதற்காக சர்வதேச அணிகள் தயாராகி வருகின்றன. இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு பின்னர் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அணியில் பும்ரா கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் வெர்னோன் பிலாண்டர் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போதைய கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா செலுத்தும் ஆதிக்கம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எந்தவொரு பேட்ஸ்மேனும் அவர் பந்து வீசும் போது திணறுவதை பார்க்கலாம். குறிப்பாக அவரது யார்க்கர் பவுலிங் தனித்துவமாக இருக்கிறது. இவ்வளவு திறமைகளை கொண்டிருக்கும் அவர் அணியில் இடம்பெற்றால் இந்திய அணி டி20 கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.