டீ போட்டுத்தர லேட்.. மனைவியின் தலையை துண்டித்த கொடூர கணவர்..!
நவீனகால திருவிளையாடலில் பிரிக்க முடியாது என்று தருமி கேட்டிருந்தால், தம்பதியும் சண்டை சச்சரவும் என்றுதான் கூத்தன் பதில் கூறியிருப்பார். அது போல், சின்ன சின்ன சண்டைகளும் அதன் பிறகு நடக்கும் சமாதானங்களும் தான், பலரின் வாழ்க்கை சக்கரத்தை சுழற்றிக்கொண்டு உள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால், கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட, சில சமயம் விபரீதத்தில் சென்று முடிவது உண்டு. அந்த வகையில், கொடூர சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர் ஜாதவ். 52 வயது கூலித் தொழிலாளியான இவர், 50 வயதான தன் மனைவி சுந்தரி மற்றும் ஒரு மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
தரம்வீர் ஜாதவ் குடிக்கு அடிமையானதாகவும், இதனால் குடும்பத்தில் பணப் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே போல், கடந்த திங்கட்கிழமையன்றும் குடிபோதையில் வந்த தரம்வீர் ஜாதவுக்கும் அவரது மனைவி சுந்தரிக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் கடுமையான வார்த்தைகளை கொட்டி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த ஆத்திரத்தில் மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்த சுந்தரி, தரம்வீர் ஜாதவுக்கு லேட்டாக டீ போட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தரம்வீர் ஜாதவ், சமையலறைக்கு சென்று தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்த வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து, மனைவியின் பின்னால் நின்றபடி கழுத்தில் வெட்டினார்.
தலை வெட்டப்பட்டு சுந்தரி தரையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடி வந்த குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கரும்புக்காட்டுக்குள் சென்று தப்பியோடிய தரம்வீரை தேடி பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து தரம்வீர் மகன் கூறுகையில், என் தந்தைக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. நாள்தோறும் ஆறு முதல் எட்டு முறை அவர் தேநீர் குடிப்பார். அன்றும் அவர் தேநீர் கேட்டபோது, அதை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் தாயை அவர் வெட்டி கொன்று விட்டார். என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட தரம்வீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். தாயையும் இழந்து தந்தையையும் பிரிந்து குழந்தைகள் நிர்கதியாக நிற்கும் நிலையில், ஆத்திரத்தால் ஒரு குடும்பமே சிதைந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.