திங்கள் – லட்டு; புதன் – கேசரி; திருவண்ணாமலையில் எந்த நாளில் என்ன பிரசாதம்?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகைத் தரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு டிசம்பர் 31-ம் தேதி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினார். அதன்படி, இனி பௌர்ணமி நாள்களில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும்.
ஞாயிற்றுக் கிழமையில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். திங்கட்கிழமையில் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
புதன்கிழமையில் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்குக் கேசரி வழங்கப்படும். வியாழக்கிழமை 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு… வெள்ளிக்கிழமை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்குக் கேசரி ஆகியன வழங்கப்படும். சனிக்கிழமையும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.