புதன் கிழமையில் வாராஹி அம்மனை வழிபாட்டால் கடன் தொல்லை தீருமாம்…

பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது. வேத ஜோதிடத்தில் 12 ராசிகளில், 6 ஆவது ராசியான கன்னியின் ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். மேலும், கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில், ஆறாம் வீடு என்பது கடன், பகை, வம்பு, வழக்கு, நோய் ஆகியவற்றைக் குறிக்கும். புதன் கிழமையின் அதி தேவதை மகா விஷ்ணு, மகா விஷ்ணுவின் சொரூபம் தான் விஷ்ணுமாயா என்று அழைக்கப்படும் ஸ்ரீ வாராஹி அம்மன். எனவே, புதனின் 6 ஆம் வீட்டு காரகத்தால் ஏற்படும் பாதிப்பை போக்குவதற்கு வாராஹி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.

ஜாதக ரீதியாக ஆறாம் வீடு பலம் இல்லாதவர்களும், புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?

பொதுவாக வாராஹி அம்மனை பிரம்மா முகூர்த்தம் அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின்பு வழிபடுவது உகந்தது.

ஒவ்வொரு புதன் கிழமையும், வாராஹி அம்மன் ஆலயத்தில் அல்லது சன்னதியில் ஒற்றைப் படை எண்ணில், அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வரவும். ஒரு சில வாரங்களிலேயே மிகப்பெரிய மாற்றங்கள் தெரியும்.

சிவப்பு நிற மலர்கள் மற்றும் நறுமணம் மிக்க மலர்களை அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்யலாம்.

மாதுளை, பசும்பால், பனை வெல்லம் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புகளை நைவேத்தியம் செய்யலாம்.

கடன் தொல்லை மட்டுமின்றி, கடனால் ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகளின் பலமும், அவர்களால் ஏற்பட்ட தாக்கமும் குறைந்து, வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். மேலும், கடனை எல்லாம் அடைக்கும் வழி கிடைக்கும். இழந்த செல்வம், சொத்துகள் திரும்ப கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *