யுவராஜ் சிங் ஜெராக்ஸ் தான்.. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த சிஎஸ்கே வீரர் அவசியம்.. அஸ்வின் ஓபன் டாக்!
சிவம் துபேவின் எழுச்சி இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையில் நல்ல பலனை அளிக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே மூலமாக இந்திய அணி மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை கண்டறிந்துள்ளது. 3 டி20 போட்டிகளில் விளையாடி 124 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதோடு, தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பையில் சிவம் துபே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
கிட்டத்தட்ட மினி யுவராஜ் சிங் போல் பேட்டிங் ஸ்டைலை கொண்டுள்ள சிவம் துபே, ஸ்பின்னர்களை வெளுப்பதில் கில்லியாக இருக்கிறார். பந்து சிறியளவில் வேகம் குறைவாக வந்தாலும், நிச்சயம் சிக்சருக்கு பறக்கிறது. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிவம் துபேவை பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் சிவம் துபேவின் எழுச்சி குறித்து இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர். பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் பங்களிக்க கூடிய வீரர். அதேபோல் சிவம் துபே மாறி வருகிறார். சிவம் துபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும்.
அந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார். டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட எப்படி சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக கொஞ்சம் காற்றுடன் இருக்குமோ, அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் இருக்கும். அந்த வகையில் சிவம் துபேவை பொறுத்த வரை ஸ்பின்னர்களை அடிப்பதில் ஒரு மான்ஸ்டராக இருக்கிறார்.
யுவராஜ் சிங்கின் மினி உருவமாக சிவம் துபே இருக்கிறார். யுவராஜ் சிங்கிற்கு இணையான வீரர் இல்லையென்றாலும், யுவராஜ் சிங் அளவிற்கு பேட்டிங் செய்ய கூடிய வீரர். இவரின் ஆட்டம் யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்துகிறது. டி20 உலகக்கோப்பையில் ரோகித், ஜெய்ஸ்வால், விராட் கோலிக்கு இடம் கிட்டத்தட்ட உறுதி. 4வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க போகிறார்.
அவர் ஸ்பின்னர்களை ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து விளாசுவார். ஆனால் அவரை இடதுகை ஸ்பின்னர்களை வைத்து பவுண்டரி அடிப்பதை எளிதாக தடுத்து நிறுத்த முடியும். அந்த நேரத்தில் எதிர்முனையில் சிவம் துபே மட்டும் நின்றால், காம்பினேஷன் வேறு மாதிரி இருக்கும். அதேபோல் பவுலிங்கும் தன்னால் போட முடியும் என்று நிரூபித்துள்ளார். கட்டர்ஸ், ஸ்லோயர் பால் உள்ளிட்டவற்றை கற்றுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.