விஜயகாந்த் சமாதியில் சின்னகவுண்டர் பாட்டு பாடி அஞ்சலி செலுத்திய செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி
மறைந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்ற செந்தில்கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியினர் ‘அந்த வானத்தைப் போல் மனம் படைத்த மன்னவனே’ என்ற சின்னகவுண்டர் பட பாடலை பாடி மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் செந்தில்கணேஷ் இந்தப் பாடலை தனது செல்போனில் பார்த்து பாடிக்கொண்டிருக்கும் போது ராஜலட்சுமி கண்கலங்கி நின்று தனது துயரத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக விஜயகாந்த் தான் தனக்கு ரோல் மாடல் என்றும், தனது சிறு வயது முதல் விஜயகாந்த் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரது திரைப்படங்களை பற்றித்தான் நண்பர்களுடன் பேசுவோம் என்றும் செந்தில்கணேஷ் கூறியுள்ளார். விஜயகாந்த் உயிரோடு இருந்தவரை அவரை எப்படியாவது நேரில் ஒருமுறையேனும் சந்தித்து புகைப்படம் எடுக்க விரும்பியதாகவும் ஆனால் தன்னால் அது முடியவில்லை என்றும் செந்தில்கணேஷ் கூறியுள்ளார். மேலும், விஜயகாந்த் கட்சிக்கு தான் தாம் முதல்முறையாக வாக்களித்ததாக கூறிய செந்தில் கணேஷ், அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடருவோம் என்றும், விஜயகாந்திடம் இருந்து கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் கூறினார்.
இதனிடையே விஜயகாந்த் மறைந்து 6 நாட்கள் கழித்து அஞ்சலி செலுத்துவது ஏன் என்றும், விஜயகாந்த் மீது அன்பு இருக்குமேயானால் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 2 நாட்களில் ஏன் செல்லவில்லை என்றும் செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.