0 மார்க் வாங்குபவர்களும் முட்டை சாப்பிட்டால் 100 வாங்கலாம்! ஆனால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்??
கொலஸ்ட்ரால் உடலில் தேவைக்கு அதிகமாகும்போது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராட முயற்சிப்பவர்களுக்கு, பிரச்சினையை மோசமாக்காத உணவுத் தேர்வுகள் என்பது கடினமானதாக உள்ளது. அதில், எந்த உணவை சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப் புரிந்துக் கொள்வது ஒரு கஷ்டம் என்றால், எதை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வது மற்றுமொரு பிரச்சனையாக இருக்கிறது.
இது தினசரி நமது உணவில் சுலபமாக இடம் பிடிக்கும் குறைந்த விலையில் அதிக சத்துக்கள் கொடுக்கும் முட்டையில் தொடங்கி, அதிக விலையில் வாங்கும் நெய் வரை தொடர்கிறது. அதிலும் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கும் இரண்டு பொருட்களில் LDL, தமனிகளில் இதய நோயை உண்டாக்கும் பிளேக் உருவாவதற்கு வழிவகுக்கிறது. அதிக அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் HDL, இரத்த ஓட்டத்தில் இருந்து LDL ஐ நீக்குகிறது.
எனவே, ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் நெய் மற்றும் முட்டையை எவ்வளவு சாப்பிடலாம் அல்லது சாப்பிடவேக்கூடாதா என்ற கேள்விகள் பலருக்கும் ஏற்படுகின்றன. இதில் முட்டை அதிலும் குறிப்பாக மஞ்சள் கரு, அதிக கொலஸ்ட்ரால் கொண்டது.
அதனால் தான் கொலஸ்ட்ரால் நோயாளிகள் உணவில் முட்டை சேர்த்துக் கொள்வது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், முட்டைகள் பலருக்கு முக்கிய உணவாக இருக்கலாம், ஆனால் கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு தினசரி ஒரு முட்டை கூட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இயல்பான உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், முழுமையாக வேகவைத்த முட்டையை நாளொன்றுக்கு 2 எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு முட்டையே போதுமானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
தினமும் எவ்வளவு முட்டைகளை உட்கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது உணவு நிபுணரை அணுக வேண்டும். ஏனென்றால், இந்த கொலஸ்ட்ரால், ஏற்கனவே எல்.டி.எல் அதிகமாக உள்ளவரின் கொலஸ்ட்ரால் அளவை மேலும் அதிகரிக்கலாம், இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
அடிக்கடி முட்டை உண்பவர்களுக்கும் இதய நோய் சம்பவங்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர், குறிப்பாக கொலஸ்ட்ரால் பிரச்சனையுடன் போராடுபவர்களுக்கு இதயப் பிரச்சனைகள் ஏற்பட முட்டை காரணமாகிறது.
உயர் இரத்த அழுத்த அபாயம்
முட்டையில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், முட்டை உண்பதை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
எடை அதிகரிப்பு
முட்டையில் அதிக கலோரிகள் உள்ளதால், முட்டைகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் பருமன் கொலஸ்ட்ராலை மேலும் சிக்கலாக்கும் என்பதால், முட்டை உட்கொள்வதை அளவுடன் வைத்துக் கொள்வது நல்லது.
ஊட்டச்சத்து சமநிலை
முட்டைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை புரத சத்தின் அருமையான மூலம் என்றாலும், முட்டை நுகர்வு அதிகரிப்பது என்பது, ஊட்டச்சத்து சமநிலையை சீர்குலைக்கும். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய மாறுபட்ட உணவு அவசியம்.
ஒரு முழு முட்டை நமது தினசரி புரதத் தேவையில் கிட்டத்தட்ட 25 சதவிகிதத்தை வழங்கி, திசுக்களை சரிசெய்தல், தசைகளை உருவாக்குதல் என உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதில்முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுதான் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கிய மந்திரம் ஆகும்.