அவர்களின் கூடாரங்கள் மரணத்திற்காக காத்திருக்கும் 1.5 மில்லியன் மக்கள்: அச்சத்தில் பாதுகாப்பு பகுதி
காஸாவின் தெற்குப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள சுமார் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்களுடைய கூடாரங்களில் இறப்பதற்குக் காத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக ரஃபா நகரம்
இஸ்ரேல் ராணுவம் அடுத்ததாக ரஃபா நகரத்தை தாக்க இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளிப்படையாக கூறியதை அடுத்து அப்பகுதியில் அவநம்பிக்கை அதிகரித்து காணப்படுவதாக கூறுகின்றனர்.
அத்துடன் அப்பகுதி பொதுமக்களை வெளியேற்றும் திட்டத்துடன் ராணுவம் செயல்பட தொடங்க வேண்டும் என்றும் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் கடும் போராட்டங்களின் நடுவே, உயிர் தப்பிய மக்கள் மாதங்கள் பயணப்பட்டு ரஃபா பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் தற்போது இங்கிருந்தும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லைக் கடவை உடைத்து எகிப்துக்குள் அத்துமீறுவதைத் தாண்டி காசாவின் மக்கள் செல்ல தெற்கே போக்கிடம் வேறு இல்லை என்றே கூறுகின்றனர்.
600,000 சிறார்கள்
இதுவரை பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலை முன்னெடுக்காமல் விட்டுவைத்த கடைசி பகுதி ரஃபா என்றே கூறப்படுகிறது. பாதுகாப்பான பகுதி என்பதால் பல நெருக்கடிகளை சமாளித்து மக்கள் வெள்ளம் போன்று ரஃபா பகுதியில் திரண்டுள்ளனர்.
ஒரே கூடாரத்தில் 30 பேர்கள் வரையில் தங்கும் அவல நிலையும் உள்ளது. இஸ்ரேல் போர் பிரகடனம் செய்த பின்னர் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றே ஐ.நா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஃபா பகுதியில் மட்டும் 600,000 சிறார்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நெதன்யாகு சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருவதுடன் அமெரிக்காவின் கோரிக்கைகளையும் நிராகரித்து வருகிரார்.