கேரள லாட்டரியில் தமிழக இளைஞருக்கு ஒரு கோடி பம்பர் பரிசு..!
கேரள அரசே லாட்டரித்துறை என்ற தனித்துறையை நிர்வகித்து லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. நாள்தோறும் ஒரு குலுக்கல் நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது.
மேலும் ஆண்டுதோறும் ஆறு பம்பர் குலுக்கல்களையும் நடத்தி பல கோடிகளில் பரிசுகளை வாரி வழங்கி வருகிறது. கேரள லாட்டரித்துறையால் பலரது வாழ்க்கை அடியோடு மாறியுள்ளது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் கேரள அரசு கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டை அறிவித்தது. மேலும் கேரளா லாட்டரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கிறிஸ்துமஸுக்கான பரிசு தொகையையும் உயர்த்தியது.
முதல் பரிசாக 20 கோடி ரூபாயும் , இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் 10 வரை பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மக்கள் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டை வாங்கி குவித்தனர்.
இந்நிலையில் இரண்டாம் பரிசான ஒரு கோடி ரூபாயை வென்ற 20 பேரில் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கோடி ரூபாயை தமிழகத்தை சேர்ந்த 24 வயது இளைஞரான இன்பதுரை வென்றுள்ளார். கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரியின் இரண்டாம் பரிசான ஒரு கோடி ரூபாயை மலையத்தூர்-நீலீஸ்வரம் பஞ்சாயத்து கோட்டமத்தை சேர்ந்த இன்பதுரை வென்றுள்ளார்.
தமிழகத்தின் மதுரை மாவட்டம் கடைவனகல் பகுதியை சேர்ந்த இன்பதுரை, கேரளாவில் உள்ள கோடமாம் கீர்த்தி பர்னிச்சர் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் கோட்டமத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் பவுலஸ் என்பவரிடம் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அவற்றில் ஒன்றில் இந்த ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. இன்பதுரை நாள்தோறும் 200 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.