CAA சட்டத்தால் குடியுரிமை பறிக்கப்படுவதாக நிரூபித்தால் ஒரு கோடி பரிசு : அர்ஜூன் சம்பத்..!
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் வழிபாடு நடத்திய அர்ஜூன் சம்பத், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை நான் வரவேற்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று உறுதிபட கூறினார்.
புதியதாக கட்சி துவங்கியுள்ள ஜோசப் விஜய்,அரசியல் அடிப்படை அறிவு கூட இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார் என்றும் அவருக்கு யார் எழுதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பினார். கிருஸ்தவ மாஃபியாக்கள் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள். விஜயின் அறிக்கையை நான் கண்டிக்கிறேன் என்று, புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வருகிறேன் என்று தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போதை மாஃபியா, லாட்டரி மாஃபியா மற்றும் சாராய மாஃபியா போன்றவர்களின் பணத்தில் திமுக தான் தேர்தலில் சந்திக்க போகிறது. அதனால் தான் திமுக இப்போதே பணத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று திமுக மேல் குற்றப் பத்திரிகை வாசித்தார் அர்ஜூன் சம்பத்.
மேலும், தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் திமுக ஆட்சியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திராவிட மாடலை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கேட்டுக் கொண்டார்.
மோடிக்கு ஆதரவாக தமிழகத்தில் எங்கள் இரண்டு லட்சம் தொண்டர்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்கள் என்று கூறிய இந்து மக்கள் கட்சி தலைவர், CAA வால் இந்திய அல்லது தமிழக இசுலாமியர்களின் குடியுரிமை பாதிக்கிறதா? என யாராவது நிருபித்தால் ஒரு கோடி பரிசு கொடுக்கிறேன் என கூறினார்.