10 நாள் பயிற்சி! ‘சின்னக் கவுண்டர்’ பம்பரக் காட்சியில் விஜயகாந்த்? மனம் திறந்த இயக்குநர்
அந்தப் படத்தில்,சுகன்யா தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்டது சர்ச்சையாகப் பேசப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி வலுவான கதையைக் கொண்டதால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
விஜயகாந்த் மறைந்தபோதுகூட எல்லா சேனல்களிலும் ‘சின்னக் கவுண்டர்’ சோகப்பாடல்தான் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.வி. உதயகுமார்.
அவர் அந்தக் காலத்தில் ஏற்பட்ட பம்பரக் காட்சிக்கு இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். கூடவே விஜயகாந்த்தின் தங்க மனசு பற்றிப் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நாங்க படம் சீரியசாக போய் கொண்டிருந்ததை உணர்ந்தோம். இடையில் ஒரு நகைச்சுவைக் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விஜயகாந்த்திடம் சொன்னோம். அதுதான் பம்பரம் விடும் காட்சி. முதலில் விஜயகாந்த் அதை எடுக்க முடியுமா என யோசித்தார். காமெடி என்றது ஏற்றுக் கொண்டார்.
அந்தக் காட்சியைக் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தோம். தொப்புள் பகுதியில் பம்பரம் விடும் போது அதில் உள்ள ஆணி, கூச்சத்தை ஏற்படுத்தும். அதைச் சமாளிப்பதற்காக பத்து நாள்கள் சுகன்யாவுக்குப் பயிற்சி கொடுத்தோம். அது ஒரு பெரிய கதை” என்றபடி பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்த உதயகுமார் விஜயகாந்த் பற்றிய தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
“இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் கூட நம்பவே முடியவில்லை சார். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஏழே நாளில் ஒரு படத்தை எடுப்பதாகத் திட்டமிட்டோம். அதற்காகப் பல நடிகர்களைப் பார்த்துக் கதை சொன்னோம்.
யாருமே எங்கள் மீது நம்பிக்கை வைத்து கால்ஷீட் கொடுக்கவில்லை. ஒருமுறை விஜயகாந்த்தைச் சந்தித்துக் கதை சொன்னோம். இப்ராஹிம் ராவுத்தரும் சேர்ந்து கதை கேட்டார். கடையில் படத்தில் நடிப்பதாக வாக்குறுதி தந்தார் ராவுத்தர்.
ஆனால், விஜயகாந்த்திற்கு நம்பிக்கை இல்லை. ‘எப்படி ஏழே நாளி படத்தை எடுப்பீர்கள்’ என்று கேட்டார். மூன்று இயக்குநர்கள் மூன்று யூனிட் ஆகப் பிரிந்து ஒரே நேரத்தில் தனித்தனியாகப் படப்பிடிப்பு செய்வோம் என்று விளக்கம் அளித்தோம்.
அதைக் கேட்ட விஜயகாந்த், ‘கதை நல்லா இருக்கிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்போவதாகச் சொல்கிறீர்கள். அதற்கு ஏழு நாள் போதாது. நான் எழுபது நாள் கால்ஷீட் கூட கொடுக்கிறேன். எனக்கு ஏழு நாள் சம்பத்தையே கொடுங்கள். படத்தைச் சரியாக எடுங்கள்’ என்று சொன்னார்.
அந்தக் காலத்தில் அவர் முன்னணி நடிகர். யார் அப்படிச் சொல்வார்கள் சொல்லுங்கள். அந்தளவுக்குத் திரைப்படக் கல்லூரி மாணவர்களாகிய எங்கள் மீது நம்பிக்கை வைத்தவர் விஜயகாந்த். அன்பான மனிதர் அவர்” எனத் தொடங்கும் போது விஜயகாந்த்தின் குணத்தை உச்சத்திற்குக் கொண்டுபோய் நிறுத்தி வைக்கிறார் இந்த சின்னக் கவுண்டர் இயக்குநர்.