100 ஏக்கர் வீடு.. வரிசைகட்டும் சொகுசு கார்கள்.. மலைக்க வைக்கும் முகமது ஷமியின் சொத்து மதிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சொத்து மதிப்பு மலைக்க வைக்கும் வகையில் உள்ளது. பொதுவாக கிரிக்கெட்டில் அதிக பிரபலமாக இருக்கும் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களே அதிக சொத்து வைத்திருப்பார்கள் என்ற பிம்பம் உள்ளது.

ஆனால், தற்போது பிசிசிஐ அனைத்து வீரர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து வருவதாலும், ஐபிஎல் போன்ற தொடர்களிலும் கோடிக்கணக்கில் சம்பளம் அளிக்கப்படுவதாலும் பல இந்திய வீரர்கள் நிறைவாக வருமானம் சம்பாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சொத்து மதிப்பு மற்றும் வருமானம் குறித்து வட இந்திய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் தொகுப்பு இங்கே –

முகமது ஷமியின் சொத்து மதிப்பு 47 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பிசிசிஐயின் ஏ கிரேடு ஒப்பந்தம் பெற்றுள்ளார். அதன்படி அவரது ஆண்டு சம்பளம் 5 கோடி ரூபாய் ஆகும். இதைத் தவிர அவர் இடம் பெறும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு 7 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 5 லட்சம், டி20 போட்டிக்கு 3 லட்சம் சம்பளம் பெறுவார்.

இதைத் தவிர்த்து தற்போது அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் 6.25 கோடி சம்பளம் அளிக்கப்படுகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக ஐபிஎல் மூலமாக மட்டுமே சம்பளமாக 56.15 கோடி ஈட்டி இருக்கிறார் முகமது ஷமி. மேலும், ஷமி விளம்பர வருமானமாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டுவார் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நைக், ஹெல் எனர்ஜி ட்ரிங்க், விஷன் 11 ஃபேன்டசி ஆப் உள்ளிட்ட நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் தனது சொந்த ஊரான அம்ரோஹாவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்ணை வீட்டை கட்டி இருக்கிறார் முகமது ஷமி. அங்கு நில மதிப்பு குறைவு என்பதால் இந்த பண்ணை வீட்டின் மொத்த மதிப்பு 30 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டில் முகமது ஷமி தனது பந்துவீச்சு பயிற்சிக்காக பல பிட்ச்களை உருவாக்கி இருக்கிறார். போட்டிகளில் ஆடாத நேரங்களில் அங்கே அவர் பயிற்சி செய்வார்.

முகமது ஷமி நான்கு சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். பிஎம்டபுள்யூ, ஆடி, ஜாகுவார் எஃப் டைப், டொயாட்டா ஃபார்சூனர் ஆகிய அந்த கார்களின் மொத்த மதிப்பு சுமார் 2.5 கோடி ஆகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *