விரைவில் விவசாயிகளுக்கு மின்கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி..!
உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு நடந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நாடு முழுவதும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி ஒன்று தற்போது நிறைவேற்றப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மின்கட்டணத்திலிருந்து 100% தள்ளுபடி அளிக்கும் திட்டத்திற்கு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தினால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குழாய் கிணறுகளை பயன்படுத்தி விவசாயிகள் ஒரு ரூபாய் கூட இனி மின்கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை. இந்த அறிவிப்பினால் 2023 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பில் எதுவும் செலுத்தாமல் இருந்தாலும் முந்தைய பில்களுக்கு வட்டி இல்லாமல் பணம் மட்டும் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக மொத்தம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை சேர்த்து இரண்டு வகையிலும் மொத்தம் 14,78,000 குழாய் கிணறுகளின் மின் கட்டணம் நூறு சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.