ஒரே பான் நம்பரில் 1000 அக்கவுண்ட்! பேடிஎம் ரிசர்வ் வங்கியிடம் சிக்கியது இப்படித்தான்!
சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) பேமெண்ட்ஸ் வங்கியில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் KYC தகவல்களைப் போதி அளவுப பெறாமல் பல கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது பணமோசடி நடப்பதற்கான வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது.
1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பான் எண்ணை (PAN) தங்கள் கணக்குகளுடன் இணைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் தணிக்கையாளர்கள் இருவரும் நடத்திய சரிபார்ப்பின்போது பேடிஎம் பேமெண்ட் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் தவறானவை எனக் கண்டறியப்பட்டது.
இந்தக் கணக்குகளில் சில பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை இயக்குனரகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கும் ரிசர்வ் வங்கி தகவல் அனுப்பியுள்ளது.
Paytm பேமெண்ட்ஸ் வங்கியில் சட்டவிரோத நடவடிக்கைக்கான ஆதாரம் கிடைத்தால் அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை நடத்தும் என வருவாய்த்துறைச் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
முக்கியப் பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படாத்து கவலைகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன. மேலும் இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறையில் ஓட்டைகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. குறிப்பாக பேடிஎம் வங்கி மற்றும் அதன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ் இடையேயான பரிவர்த்தனைகளின் மூலம் இந்தக் குறைபாடு தெரியவந்துள்ளது.
மேலும், Paytm மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மூலம் தனியுரிமைத் தகவல்கள் கசிவது குறித்து கவலைகளும் எழுகின்றன. இதனால், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் பரிவர்த்தனைகள் செய்வதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து, Paytm நிறுவனத்தின் பங்கு கடுமையான சரிவைச் சந்தித்தது. இரண்டு நாட்களில் பேடிஎம் பங்கு மதிப்பு 36% சரிந்தது. அதன் சந்தை மதிப்பில் 2 பில்லியன் டாலர் பறிபோனது.