ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 11 நாட்கள் சிறப்புப் பூஜை: பிரதமர் மோடி அறிவிப்பு
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தான் இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன. கும்பாபிஷேகம் நிகழும் நன்நாளில் இந்திய மக்களின் பிரதிநிதியாக கலந்துகொள்ள கடவுள் என்னைப் படைத்துள்ளார். இதை மனதில் கொண்டு நான் 11 நாட்கள் சிறப்புப் பூஜையை இன்று (ஜன.12) தொடங்குகிறேன். மிகவும் புனிதமான, வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்வைக் காண நான் பாக்கியம் செய்துள்ளேன். முதன்முறையாக நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன். இந்த 11 நாட்கள் பூஜைக்காக மக்களின் ஆசியைக் கோருகிறேன்” எனப் பேசியுள்ளார். பிரதமர் மோடி கும்பாபிஷேக நெறிமுறைகளின்படி பூஜைகள் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விழா சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என்பதால் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.
பூரி சங்கராச்சாரியாரின் கண்டனம்: முன்னதாக, ஒடிசாவில் அமைந்துள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக சில கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை. இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
பிரதமர் மோடி கருவறையில் இருந்து சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வார். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது, அதாவது இந்த நிகழ்வுக்கு ஏதோ ஓர் அரசியல் கோணம் கொடுக்கப்படுகிறது. கண்ணியமான முறையில் இந்த நிகழ்வு நடத்தப்பட வேண்டும். நான் அதை எதிர்க்கவும் இல்லை, அதில் கலந்து கொள்ளவும் மாட்டேன். நான் எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன், அனைத்து நிகழ்வுகளும் சுமுகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் சிறப்புப் பூஜைகளை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.