24 வயதில் 11வது சதம்.. பிரின்ஸ் சுப்மன் கில்லின் மாஸ் கம்பேக்.. காலியான இங்கிலாந்து பவுலர்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கான வீரராக உருவாகி வருபவர் சுப்மன் கில். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் சுப்மன் கில்லின் ஃபார்ம் மோசமாகி வந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் கூட அடிக்க முடியாமல் திணறினார். தொடர்ச்சியாக 12 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிய பின்னர், சுப்மன் கில் மீதான விமர்சனங்கள் தீவிரமாகின. இங்கிலாந்து அணியின் பீட்டர்சன் நேரடியாக சுப்மன் கில்லுக்கு ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் பிரச்சனை இருப்பது தெரிகிறது என்று விமர்சித்தார்.

இதன்பின் 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் சதம் விளாசிய அவர், 3 மற்றும் 4 ஆகிய டெஸ்ட் போட்டிகளில் பிரஷரான சூழலை எளிதாக எதிர்கொண்டு அரைசதம் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதனால் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக உருவாகி வருவதாக ரசிகர்கள் பாராட்டினர். இருந்தாலும் இங்கிலாந்து அணியை ஆதிக்கம் செலுத்தி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை சுப்மன் கில்லுக்கு இருந்தது.

அப்படியான இன்னிங்ஸை இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சுப்மன் கில் விளையாடியுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து களத்தில் இருந்தது. 26 ரன்களுடன் 2வது நாள் ஆட்டத்தை சுப்மன் கில் தொடங்கிய நிலையில், ஆண்டர்சன் பந்தில் டவுன் தி டிராக் இறங்கி வந்து அபாரமான சிக்சர் ஒன்றை விளாசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிறப்பாக ஆடிய அவர் 64 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, ஆட்டம் சுப்மன் கில்லின் கைகளுக்குள் வந்தது.

அதன்பின் இங்கிலாந்து பவுலர்களை அனைத்து திசைகளிலும் சிதறடித்தார். ஆண்டர்சன், மார்க் வுட், ஹார்ட்ர்லி, பஷீர் என்று 4 பவுலர்களை பவுண்டரிக்கு மேல் பவுண்டரியாக விளாசி பொளந்து கட்டினார். 96 ரன்கள் எடுத்திருந்த போது, ஸ்வீப் ஷாட் மூலமாக பவுண்டரி விளாசி சதத்தை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். சதமடித்த பின் தொப்பியை எடுத்து தனது ஸ்டைலில் சல்யூட் அடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பலரும் சுப்மன் கில்லுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 24 வயதாகும் சுப்மன் கில், சர்வதேச கிரிக்கெட்டில் 11வது சதத்தை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *