120 கி.மீ. செல்லக் கூடிய எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்! முழு விவரம்

பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படும் நிலையில், பசுமைப் போக்குவரத்தை உறுதி செய்கின்ற எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. சொகுசு வசதிகளைக் கொண்ட கார்கள் பல ஏற்கனவே அறிமுகமாகி, மக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் ஸ்கூட்டர் மாடல்களில் தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. அவற்றையும் பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்றாலும், அவற்றின் வேகம் என்பது மணிக்கு 40 கி.மீ அளவில் தொடங்கி 80 அல்லது 100 கி.மீ. வரையில் தான்.
அதே சமயம் அதிவேகமாக செல்லக் கூடிய பைக்குகளையும், ஸ்போர்ட்ஸ் மாடலில் ஸ்டைலாக இருக்கக் கூடிய பைக்குகளையும் விரும்பக் கூடிய நபர்களுக்கு ஸ்கூட்டர் மாடல் வாகனங்களை பிடிப்பதில்லை. பைக் மாடல் எலெக்ட்ரிக் வாகனங்கள் சில ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளன.
அந்த வரிசையில் கோவா மாநிலத்தில் இயங்கும் கபீரா மொபிலிட்டி என்னும் நிறுவனம் அதிவேகத்தில் செல்லக் கூடிய KM3000 மற்றும் KM4000 ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ.1.74 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இதற்கு முன்பு இதே பெயரில் முதல் தலைமுறை வாகனங்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை வாகனங்களில் அதன் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
தற்போது வெளிவந்துள்ள இரண்டு மாடல்களிலும் டைமண்ட் ஸ்டீல் டியூப் பிரேம் இடம்பெற்றுள்ளது.
அதே சமயம் ஸ்டீல் அலல்து அலுமினியம் அலாய் பிரேம் கொண்ட வேரியண்டுகளையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதிவேகத்தில் இயங்கும்:
KM3000 மற்றும் KM4000 ஆகிய பைக்குகள் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியவை ஆகும். வாகனத்தை இயக்கிய முதல் 2.9 நொடிகளில் இது 0 முதல் 40 கி.மீ வேகத்தில் இயங்கும். இதில் 201 கி.மீ. மைலேஜ் தரக் கூடிய மாடல் 1.5 கிலோவாட் பேட்டரியுடன் விற்பனைக்கு வருகிறது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தமட்டிலும் டூயல் சிபிஎஸ், லார்ஜர் டிஸ்க் பிரேக், டெலஸ்கோபிக் ஃபோர்க் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. KM3000 விலை ரூ.1.74 லட்சம் மற்றும் KM4000 விலை ரூ.1.76 லட்சம் ஆகும்.
சோதனை இயக்கம்:
இந்த இரு பைக்குகளையும் ஓட்டிப் பார்த்து வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் வசதிக்காக, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதே சமயம், 2024 மார்ச் மாதத்தில் இருந்து இந்த நிறுவனத்தின் டீலர்கள் மூலமாக விற்பனை தொடங்க இருக்கிறது.