1200 விமானங்கள் ரத்து… மூடப்பட்ட பாடசாலைகள்: ஸ்தம்பிக்கும் இயல்பு வாழ்க்கை

வடகிழக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட நிலையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1220 விமானங்களுக்கு மேல் ரத்து
செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த பனிப் புயல் வடகிழக்கு அமெரிக்காவை தாக்கியது. இதனையடுத்து 1220 விமானங்களுக்கு மேல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதில் நியூயார்க்கின் உள்நாட்டு லாகார்டியா விமான நிலையத்தின் அனைத்து விமானங்களில் 43 சதவீதமும், நியூ ஜெர்சியின் நெவார்க் விமான நிலையத்தில் 28 சதவீத சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வாகன சாரதிகள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே முதல் முறை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளதாக
நான்கு முதல் எட்டு அங்குலங்கள் அளவுக்கு பனிப்பொழிவு இருக்கலாம் என்றும் காற்று மணிக்கு 40 மைல்கள் வரை வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், வாகன சாரதிகள் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொது போக்குவரத்தை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, 32 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பனிப்பொழிவு அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் பல கிராமப்புறங்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும், அதிக பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நியூ ஜெர்சியில் உள்ள ஹாம்ப்டன் டவுன்ஷிப் பகுதியில் 13 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது, அதே சமயம் நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் உள்ள செஸ்டர் பகுதியில் 11 அங்குலம் அளவுக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *