பாடசாலையில் பட்டப்பகலில் 13 வயது சிறுவனின் வெறிச்செயல்: விசாரணையை எதிர்கொள்ளும் பெற்றோர்
செர்பியா நாட்டில் பாடசாலை ஒன்றில் 13 வயது சிறுவன் முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிறுவனின் பெற்றோர் தற்போது விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
சக மாணவர்கள் 9 பேர்கள்
செர்பியா நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் நடந்துள்ளது. தற்போது அந்த சிறுவனின் பெற்றோர் திங்கட்கிழமை முதல் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல்தாரியின் சக மாணவர்கள் 9 பேர்கள் உட்பட மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் தாக்கம் விலகும் முன்னர், அடுத்த நாள் இன்னொரு துப்பாக்கிச் சூடு சம்பவமும் செர்பியாயை மொத்தமாக உலுக்கியது.
தொடர்ந்து மக்கள் பெருமளவில் திரண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குறிப்பிட்டு, தொடர்புடைய பாடசாலை தாக்குதல்தாரியின் தந்தை மீது கடந்த அக்டோபர் மாதம் அரசாங்கம் வழக்குப் பதிந்துள்ளது.
இதனையடுத்தே அந்த குடும்பம் விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த தந்தையே தொடர்புடைய சிறுவனுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
தந்தையிடம் இருந்து களவாடி
மேலும், தமது ஆயுதங்களை பாதுகாக்க தவறியதாகவும் கூறி அந்த தந்தை மீதும் இன்னொரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த சிறுவன் தந்தையின் துப்பாக்கி ஒன்றையும் 92 தோட்டாக்களையும் தந்தையிடம் இருந்து களவாடி மறைத்து வைத்திருந்ததாகவும், அதுவே துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
சிறுவனின் தாயார் மீதும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்றிரண்டு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மீதும் செர்பிய சட்டத்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது.
தாக்குதல்தாரியின் வயது சம்பவத்தின் போது 13 என்பதால், செர்பிய சட்டத்தின்படி அவர் மீது வழக்கு பதியவோ விசாரணை முன்னெடுக்கவோ வாய்ப்பில்லை. நாட்டை உலுக்கிய பாடசாலை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர், ஜனாதிபதி Aleksandar Vucic நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதாக உறுதி அளித்திருந்தார்.