12 மாணவர்கள் உள்பட 14 பேரை காவு வாங்கிய குஜராத் சுற்றுலா படகு விபத்து..!
குஜராத் வகோடியா பகுதியில் சன்ரைஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை சேர்ந்த 23 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் வதோதராவில் உள்ள ஹர்ணி குளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்த குளத்தில் வதோதரா மாநகராட்சி மற்றும் கோட்டியா என்ற நிறுவனம் சார்பில் படகு போக்குவரத்து உள்ளிட்ட கேளிக்கை அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்குள்ள படகில் 15 பேர் மட்டுமே பயணிக்கலாம் என்ற நிலையில், 27 பேரும் ஒரே படகில் ஏறியுள்ளனர். படகு குளத்தின் நடுவே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்த சிலர், உடனடியாக தண்ணீருக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 23 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் 14 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 12 பேர், 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆவர். மேலும் 4 சிறுவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்க
ளை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கும், தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், மாநில அரசு உதவிகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் பூபேந்திர பட்டேல், “மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து இதயம் நொறுங்கியது. மறைந்த மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் இந்த துக்ககரமான சூழலில் அவர்களுக்கு மன தைரியத்தை வழங்கட்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?: வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் தலைவர் ஷீத்தல் மிஸ்திரி கூறுகையில், “படகில் சுமார் 35 பேர் இருந்தனர். ஒருவேளை படகின் அளவை தாண்டி அதிகளவு ஆட்கள் ஏறியிருக்கலாம் என கருதுகிறோம். இதனால் , படகு சமநிலையை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.