1400 ஏக்கர்… 270 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மாண்ட பங்களா… மார்க் ஜூக்கர்பெர்க்கின் சீக்ரெட் பிளான்!
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் ஒரு ரகசிய மாளிகை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மாளிகை சுமார் 1400 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தி நியூயார்க்கின் கூற்றுப்படி, மார்க்கின் இந்த பிரம்மாண்ட மாளிகை ஹவாயில் உள்ள குவாய் தீவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு சுமார் 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கின் இந்த பங்களா உலகின் விலை உயர்ந்த பங்களாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
மார்க்கின் இந்த பிரம்மாண்ட மாளிகையில் பாதாள அறைகளும் கட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து தி வயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாளிகையில் மொத்தம் 12 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு கட்டிடத்திலும் சுமார் 30 படுக்கை அறைகள், 30 கழிவறைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்களாவில் பொருட்களை சேமிப்பதற்காக 5000 அடி சுரங்கம் மற்றும் 18 அடி உயரம் கொண்ட தண்ணீர் தொட்டியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு வளாகங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த பங்களா ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் 57,000 சதுர அடி ஆகும். அதுமட்டுமன்றி மாளிகை முழுவதும் லிஃப்டுகள் நிறுவப்பட உள்ளன. அலுவகம், பேச்சரங்கம் என பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கும். மார்க்கின் பிரம்மாண்ட மாளிகைக்கு மேலும் பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் மிகப்பெரிய சமையலறைகள் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒரே இடத்தில் சமைக்கும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த மாளிகையின் ஒரு பகுதியில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், உணவு உள்ளிட்டவற்றை தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளும் வகையில் விவசாயம், கால்நடை வளர்த்தல் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த பங்களா கட்டுமானப்பணிகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும், கட்டுமானப்பணிகளில் ஈடுபடுபவர்கள் வெளி உலகினருடன் தொடர்ப்புக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படி தடையை மீறி தகவல் தெரிவித்தால் அவர்கள் பணியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.