15% பெட்ரோல் இருந்தால் போதும்!! ஹோண்டா உருவாக்கி இருக்கும் இந்த பைக்கை பற்றி தான் எல்லா பக்கமும் பேச்சு!
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) கண்காட்சியில் இந்தியாவில் உள்ள ஹோண்டா குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தயாரிப்புகளை வரிசையாக காட்சிக்கு நிறுத்தி உள்ளன. இதன்படி, எந்தெந்த ஹோண்டா தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை இனி பார்க்கலாம்.
புதிய முயற்சியாக, முதல்முறையாக ‘பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ’ என்கிற பெயரில் புதிய கண்காட்சி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடத்தப் படுகிறது.
போக்குவரத்து தொடர்பாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்டுப்பிடிப்புகளை மக்கள் முன் காட்சிப்படுத்துவதற்கான தளமாக விளங்கும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளையும், கண்டுப்பிடிப்புகளையும் காட்சிக்கு நிறுத்தி உள்ளன. இந்த வகையில், ஹோண்டா குழுமத்தின் நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இதன்படி, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI), ஹோண்டா பவர் பேக் எனர்ஜி இந்தியா (HEID), ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ஹோண்டா இந்தியா ஆற்றல் தயாரிப்புகள் (HIPP) நிறுவனங்கள் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளன. புதிய வாகனங்கள் மட்டுமின்றி, ஹோண்டா சார்பில் புதிய தொழிற்நுட்பங்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
கண்காட்சியில் ஹோண்டா சார்பில் காட்சிப் படுத்தப்பட்டவற்றில் அனைவரையும் கவர்ந்தது ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் மோட்டார்சைக்கிள் ஆகும். ஏனெனில், இந்திய மார்க்கெட்டிற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இது HMSI-இன் முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் 2-வீலர் ஆகும். பசுமையான போக்குவரத்துக்கு ஹோண்டாவின் முன்முயற்சியாக இந்த மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலத்தில் பசுமையான போக்குவரத்துக்காக இயக்கப்பட உள்ளன என்றாலும், தற்போதைக்கு பெட்ரோல்/ டீசல் எரிபொருளுக்கு பதிலாக எந்தவொரு எரிபொருளில் இயங்கும் வாகனமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மத்திய அரசு உள்ளது. ஆதலால், இவ்வாறான ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வாகனங்களுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கிறது.
அந்த உந்துதலில், ஹோண்டா தனது முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்கை காட்சிப்படுத்தி உள்ளது. எத்தானல் சார்ந்த ஃபிளெக்ஸ்-ஃப்யுலில் இந்த ஹோண்டா பைக் இயங்கக்கூடியதாக உள்ளது. பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஹோண்டா ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்கில் 293.52சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் இ85 எரிபொருளில் இயங்கக்கூடியது. அதாவது, வெறும் 15% பெட்ரோல், மீதி 85% எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளில் இந்த பைக் இயங்கும். இந்த ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக் மட்டுமின்றி, பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் இருசக்கர வாகனங்களுக்கான ஹைப்ரீட் தொழிற்நுட்பம், ஹோண்டா உணர் தொழிற்நுட்பம் – இண்டெலிஜண்ட் அடாஸ் தொழிற்நுட்பம் மற்றும் இ-ஸ்வாப் பேட்டரி தொழிற்நுட்பம் உள்ளிட்டவையும் ஹோண்டா சார்பில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.