திருச்சிக்கு போக ரூ.15 ஆயிரம்.. பகல் கொள்ளையில் இறங்கிய விமான நிறுவனங்கள்! கட்டணம் பல மடங்கு உயர்வு
சென்னை: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
வழக்கத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான கட்டணம் அதிகரித்துள்ளது.
வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமையான நேற்றே ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டிருக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இன்னும் கூடுதலாக பேருந்து தேவை எழுந்திருக்கிறது. அதேபோல, தனியார் நிறுவனங்களும் பேருந்துகளை தூசி தட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றன. இதன் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.
பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் கட்டணங்கள் உயர்வது இயல்பானதுதான் என்றாலும், இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றன. அதேபோல உள்நாட்டு விமான கட்டணங்களும் உயர்ந்திருக்கின்றன. வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.3,000 கட்டணம் இருக்கும். ஆனால், இந்த முறை ரூ.6,300ல் தொடங்கி ரூ.15,857 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதே சென்னையிலிருந்து மதுரைக்கு, வழக்கமாக ரூ.4000 வரை இருக்கும். ஆனால் இந்த முறை ரூ.6,700 தொடங்கி ரூ.17,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியை பொறுத்த அளவில், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டெல்லிக்கு ரூ.14,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் விமான எரிபொருள் விலை தொடர் சரிவை கண்டது. எனவே விமான கட்டணங்கள் சரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என பயணிகள் புலம்புகின்றனர். பண்டிகை நாட்களுக்கு ஒரு விமான கட்டணம், மற்ற நாட்களுக்கு ஒரு விமான கட்டணம் என்கிற நடைமுறையை விமான நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்று விமான பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.