டெஸ்டில் குறைவான பந்துகளில் 150 விக். கைப்பற்றிய இந்திய வீரர்… பும்ரா புதிய சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைவான பந்துகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா ஏற்படுத்தியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்றைய 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இங்கிலாந்தை விடவும் 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் 5 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார். 112 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 396 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பும்ரா 15.5 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தபோது சர்வதேச போட்டிகளில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. இதன் மூலம் மிகக்குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா ஏற்படுத்தியுள்ளார்.
டெஸ்டில் 150 விக்கெட்டுகளை இந்திய பவுலர்களான பும்ரா 6781 பந்துகளிலும், உமேஷ் யாதவ் 7661 பந்துகளிலும், முகமது ஷமி 7755 பந்துகளிலும், கபில்தேவ் 8378 பந்துகளிலும், அஷ்வின் 8380 பந்துகளிலும் கைப்பற்றியுள்ளனர்.