16 மீட்டர்.. எங்கோ பறந்த பந்து.. தாவிப் பிடித்த பிரின்ஸ்.. டக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த கில்!
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் அடித்த பந்தை 16 மீட்டர் தூரம் ஓடி சென்று இந்திய அணியின் சுப்மன் கில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தரம்சாலா பிட்ச் முதல் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி இம்முடிவை எடுத்துள்ளது.
இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் அதிரடி வீரர்களான கிராலி – டக்கெட் கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். தொடக்கத்திலேயே பந்தில் கொஞ்சம் ஸ்விங் கிடைக்க, அதனை பயன்படுத்தி பும்ரா அட்டாக் மேக் அட்டாக் செய்தார். சில பந்துகள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினாலும் இருவருமே விக்கெட் கொடுக்க கூடாது என்று அமைதி காத்தனர்.
அதுமட்டுமல்லாமல் பேஸ் பால் அணுகுமுறையை கைவிட்டு வழக்கத்திற்கு மாறாக டக்கெட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால், பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் கூடுதல் ஓவர்களை வழங்கினார் ரோகித் சர்மா. தொடர்ச்சியாக இருவருமே 7 ஓவர்களை வீசி அசத்தினார். ஆனாலும் இங்கிலாந்து அணி 50 ரன்களை எளிதாக கடந்தது.
இதன்பின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் அட்டாக்கில் வந்தனர். அஸ்வின் ஒரே லைன் மற்றும் லெந்தில் வீசாமல் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக ரன்களை விட்டுக் கொடுத்தார். இதையடுத்து குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் டக்கெட் ஒரு பவுண்டரியை அடிக்க, இன்னொரு பவுண்டரியை அடிக்கும் ஆசையில் பேட்டை ஓங்கினார்.
ஆனால் அது டாப் எட்ஜாகி பறக்க, அதனை பார்த்த சுப்மன் கில் கிட்டத்தட்ட 16 மீட்டர் பின்னோக்கி ஓடினார். சரியாக பந்தை பார்த்து கொண்டே ஓடிய சுப்மன் கில், தாவிப் பிடித்து அசாத்தியத்தை நிகழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 64 ரன்களுக்கு உடைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த போப் மீண்டும் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்க க்ரீஸில் இருந்து வெளி வந்தார்.
ஆனால் பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனால் எளிய ஸ்டம்பிங் வாய்ப்பை பயன்படுத்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வெயில் அதிகரிக்க அதிகரிக்க பிட்சில் மாற்றம் நடப்பதால், ஆட்டம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.