3 ஆண்டுகளில் 1600% லாபம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த Avantel..!
அவன்டெல் நிறுவனம் (Avantel), உயர் பவர் பிராட்பேண்ட் வயர்லெஸ், செயற்கைகோள் தொடர்பு மற்றும் பிராட்பேண்ட் அணுகல் தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம் வயர்லெஸ் மற்றும் அணுகல் தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பை நிலையான மற்றும் தனியுரிம சாப்ட்வேர் கருவிகளை பயன்படுத்தி மேற்கொள்கிறது.
இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.30 கோடி ஈட்டியிருந்தது. 2023 செப்டம்பர் காலாண்டில் அவன்டெல் நிறுவனத்தின் நிகர வருவாய் 49.99 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.54.33 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.36.23 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.16.07 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6.14 கோடியாக இருந்தது. மேலும் அவன்டெல் நிறுவனம் தொடர்ச்சியாக வர்த்தக ஒப்பந்தங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கடற்படை தகவல் தொடர்பு நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில், முக்கியமான சாட்காம் உபகரணங்களை தயாரித்து வழங்குவதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை கடற்படையிடம் இருந்து அவன்டெல் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.5.3 கோடியாகும்.அண்மையில் நியுஸ்பேஸ் இந்தியாவிடம் இருந்து செயற்கைகோள் முனையங்களுக்கான ரூ.67.92 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றது.
இது விண்வெளி துறையில் தனது வலுவானை இருப்பை அவன்டெல் நிறுவனம் உறுதிப்படுத்துகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வர்த்தக ஒப்பந்தங்கள், இந்நிறுவனத்தின் வலுவான நிதி செயல்திறனுடைய நேரத்தில் வந்துள்ளன.பல தரப்பட்ட போர்ட்போலியோ மற்றும் ஈர்க்கக்கூடிய ஆர்டர் புத்தகத்துடன் உயர் தொழில்நுட்ப தகவல்தொடர்பு பிரிவில் தொடர்ந்து வளர்ச்சி காணும் நிலையில் அவன்டெல் நிறுவனம் உள்ளது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.122.10ஆக உள்ளது.இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை சுமார் 120 சதவீதம் உயர்த்தியுள்ளது.