24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்! அம்பலமான 50 வயது பெண்ணின் மோசடி
இத்தாலியில் பெண்ணொருவர் அரசின் நிதியுதவியைப் பெற பலமுறை கர்ப்பம் அடைந்ததாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.
12 முறை கருச்சிதைவு
இத்தாலி நாட்டில் மகப்பேறு அடையும் பெண்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
ரோம் நகரைச் சேர்ந்த Barbara Loele என்ற 50 வயது பெண் 5 குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், 12 முறை தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் அரசிடம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் 1,10,000 யூரோக்களை (இந்திய மதிப்பில் 98 லட்சம்) அவர் பெற்றுள்ளார். அத்துடன் அவருக்கு கூடுதல் மகப்பேறு விடுப்பும் கிடைத்ததுடன், வேலையைத் தவிர்க்கவும் முடிந்துள்ளது.
அதிகாரிகளுக்கு சந்தேகம்
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் Barbara குழந்தை பெற்றது உண்மையா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை கண்காணித்தபோது அவர் கர்ப்பம் என்று கூறி போலி நாடகம் நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்தது. அவர் 24 ஆண்டுகள் மகப்பேறு மோசடி நாடகம் நடத்தி அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து Barbara-வை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
போலி ஆவணங்கள்
அங்கு வழக்கறிஞர்கள் வாதிட்டபோது, Barbara ரோமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறப்பு சான்றிதழை திருடியதும், போலி ஆவணங்களை தயாரித்ததும் தெரிய வந்தது.
அதேபோல் அவரது குழந்தைகளின் பெயர்கள் எந்த சட்ட ஆவணத்திலும் இல்லை என்றும், யாரும் அவர்களை பார்த்ததில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் தன்னை கர்ப்பிணியாக காட்டிக் கொள்ள Barbara தலையணைகளை பயன்படுத்தியதும், கர்ப்பிணிப் பெண்களின் நடை பாணிகளை அவர் கடைசிப்பிடித்ததும் தெரிய வந்தது.
இறுதியில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Barbaraவுக்கு ஒரு வருடம் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மோசடி நடத்தி தனது வாழ்க்கையை எளிதாக்க முடியும் என நினைத்த Barbara தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.