17 ஆண்டு இடைவிடாத நட்பு.. 100வது டெஸ்ட்டில் குழந்தைகளுடன் வந்த நியூசிலாந்து வீரர்கள் கேன் – சவுத்தி
நியூசிலாந்து அணியின் மூத்த வீரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி ஆகிய இருவரும் தங்களின் 100வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்கினர். கடந்த 2008ஆம் ஆண்டு இருவரும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் ஒன்றாக பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒன்றாகவே பயணித்த இருவரும், தற்போது தங்களின் 100வது டெஸ்ட் போட்டியிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இருவரும் தங்களின் குழந்தைகளுடன் ஒன்றாக ஆடுகளத்துக்கு உள்ளே வந்தனர். அந்த காட்சி ரசிகர்களை நெகிழச் செய்தது.
2008 அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் உலகின் முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஒரு தொடர். அதற்கு காரணம் அந்த தொடரில் பங்கேற்ற பல வீரர்கள் பிற்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருமாறினர். அதில் முதல் வீரர் விராட் கோலி. அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி என பலர் கிரிக்கெட் உலகில் கோலோச்சி வருகின்றனர்.
இதில் நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி 2008இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். கேன் வில்லியம்சன் 2010இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்த நிலையில் தற்போது இருவரும் தங்களின் 100வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்கினர்.
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் கேன் வில்லியம்சன் – டிம் சவுத்தி தங்கள் குழந்தைகளுடன் மைதானத்துக்கு உள்ளே வந்தனர். அவர்களுக்கு சக நியூசிலாந்து வீரர்கள் சார்பில் கைதட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்றைய தினம் இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் துவக்கத்திலும் இரண்டு வீரர்கள் தங்களின் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர். அதில் ஒருவர் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின். மற்றொருவர் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ.