கொரோனா மருந்தால் 17,000 பேர் உயிரிழப்பு? வெளியான பகீர் தகவல்! குழம்பி நிற்கும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: கொரோனா முதலில் பரவ தொடங்கிய போது அதன் சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகின் எந்தவொரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனா வேக்சின் தொடங்கி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரே இப்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட மருந்து குறித்து சில பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்: அப்படி கொரோனா காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளில் ஒன்றுதான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின். கொரோனா உச்சத்தில் இருந்த போது, அதற்கான தடுப்பூசியும் அப்போது கண்டுபிடிக்காத நிலையில், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த சுமார் 17,000 பேர் உயிரிழப்புகளுக்கும் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் இது குறித்த ஆய்வை நடத்தியிருந்தனர். கொரோனா முதல் அலை சமயத்தில் மார்ச் முதல் ஜூலை 2020 வரை பல உலக நாடுகளில் தீவிர பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தான் வழங்கப்பட்டு இருந்தது. இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் ஆறு நாடுகளில் சுமார் 17,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
புகழந்து தள்ளிய டிரம்ப்: அப்போது அமெரிக்காவில் தான் கொரோனா வேகமாகப் பரவி வந்தது. அப்போது சிகிச்சைக்கு மருந்துகள் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்றார். முடக்கு வாதம் மற்றும் லூபஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என்றார். இதை மேஜிக் செய்யும் அதிசய மருந்து என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் மட்டுமின்றி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூட அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது. சில ஆய்வாளர்கள் எல்லாவற்றையும் தாண்டி இதை கொரோனாவுக்கு எதிரான மேஜிக் புல்லட் என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால், உண்மையில் அதன் விளைவு நேர்மாறாகவே இருந்துள்ளது.