சீனாவுடனான எல்லையை இணைக்க அருணாச்சல் பிரதேசத்தில் ரூ.1,782 கோடி சாலை திட்டம்
அருணாச்சல பிரதேசத்தில் ரூ.1,782 கோடி செலவில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தில் ரூ.1,782 கோடி செலவில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அப்பர் சியாங் மாவட்டம் பாங்கோ முதல் ஜோர்கிங் வரையிலான 82 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை, சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியை இணைக்கும்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை, பாதுகாப்புப் படையினரின் பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதுடன் போர் காலத்தில் எல்லைப் பகுதியை விரைவாக சென்றடையவும் உதவும். மேலும் இந்த சாலை அப்பகுதியில் உள்ள கிராமங்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு தனது எக்ஸ் வலைதளத்தில், ‘பாங்கோ முதல் ஜோர்கிங் வரையிலான சாலை திட்டத்துக்கு ரூ.1,782 கோடி நிதி ஒதுக்கிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.