18 மாத உழைப்பு.. ஒருநாளில் 140 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி.. துருவ் ஜுரெலுக்கு துணையாக நின்ற ராஜஸ்தான்!
இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் பேட்டிங்கில் முன்னேற்றமடைய ராஜஸ்தான் அணி நிர்வாகம் உறுதுணையாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் நாயகனாக துருவ் ஜுரெல் மாறியுள்ளார். 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, டெய்லெண்டர்களுடன் இணைந்து 307 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தாலும், ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
2வது டெஸ்டில் விளையாடும் இளம் வீரருக்கு இவ்வளவு முதிர்ச்சியா என்ற முன்னாள் வீரர்களும் வியந்து வருகின்றனர். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக பொறுப்பை துருவ் ஜுரெல் கைப்பற்றியுள்ளார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் துருவ் ஜுரெல்லின் வளர்ச்சிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் உறுதுணையாக இருந்தது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பல்வேறு லீக்குகளிலும் அணிகளை நிர்வகித்து வருகிறது. இதனால் வீரர்களின் திறமையை முன்னேற்றுவதற்காக கிரிக்கெட் அகாடமியை நிறுவி பயிற்சியளித்து வருகிறது. ஏற்கனவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதன்மூலமாக பயன்பெற்றுள்ளார். தற்போது அவரை தொடர்ந்து 18 மாதங்களாக துருவ் ஜுரெல்லும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அகாடமியில் ஒவ்வொரு நாளும் 140 ஓவர்களுக்கும் வரை எதிர்கொண்டு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் துருவ் ஜுரெல். அதுமட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் வரை பிரத்யேக பயிற்சியை வெவ்வேறு பிட்ச்களில் மேற்கொண்டுள்ளார். சாதாரண பேட்டிங் பயிற்சி மட்டுமல்லாமல், டெக்னிக்கலாகவும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் ஃபீல்டிங் செட் அப், டி20 கிரிக்கெட்டுக்கான அதிரடி பேட்டிங் பயிற்சி என்று துருவ் ஜுரெலை தயார் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம். இதன் காரணமாக வெறும் 15 முதல்தர போட்டிகளில் விளையாடி இருந்தாலும், துருவ் ஜுரெலால் களத்தில் இவ்வளவு முதிர்ச்சியுடன் விளையாட முடிந்ததாக பார்க்கப்படுகிறது.