லொறியுடன் இரட்டை அடுக்கு பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் பலி!
மெக்சிகோ நாட்டில் லொறி – பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் இருந்து 50 பயணிகளுடன் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று, சினலோவா மாகாணத்தின் லாஸ் மொகிஸ் நகர் நோக்கி பயணித்தது.
வடமேற்கு பகுதியில் பேருந்து செல்லும்போது, லொறி ஒன்றின் மீது மோதி தீப்பற்றியது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மெக்சிகோ நாட்டில் அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு போன்ற காரணங்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
குறிப்பாக, கடந்த ஆண்டு சூலையில் பேருந்து ஒன்று மலை சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்ததில் 29 பயணிகள் உயிரிழந்தனர்.