டிராவில் முடிந்த முதல் சூப்பர் ஓவர் – 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங்கின் அபார பேட்டிங்கால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், ரோகித் சர்மா அதிகபட்சமாக 121 ரன்களும் (நாட் அவுட்), ரிங்கு சிங் 69 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 50 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 50 ரன்களும் எடுத்தனர். கடைசியாக குல்பதீன் நைப் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.
அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில் குல்பதீன் நைப் மற்றும் முகமது நபி இருவரும் முதலில் பேட்டிங் செய்தனர். முகேஷ் குமார் சூப்பர் ஓவர் வீசினார். இதில் முதல் பந்திலேயே குல்பதீன் நைப் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினார். குர்பாஸ் 4, 1 ரன்கள் எடுக்க, நபி 1, 6, 1 + 2 என்று ரன்கள் எடுக்க இந்திய அணிக்கு 16 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சூப்பர் ஓவர் விளையாடினர். இதில், முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 2 பந்துகளில் ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் பறக்க விட்டார். 5ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் 2ஆவது சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தது. இதில், ரோகித் சர்மா ரிட்டயர்டு ஹர்ட் முறையில் நடையை கட்டினார். ஏனென்றால், வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்பதால் அவரால் ஓட முடியாது என்பதற்காக ரிங்கு சிங் களமிறங்கினார்.
ஆனால் அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்படவே முதல் சூப்பர் ஓவர் டை ஆனது. இதன் மூலமாக போட்டியானது 2ஆவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில், ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் முதலில் களமிறங்கினர். ரோகித் சர்மா 6, 4 மற்றும் 1 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த 2 பந்துகள் விளையாட சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால், 5 ஆவது பந்தில் அவரால் அடிக்க முடியாத நிலையில் ரன் ஓட முயற்சிக்க ரோகித் சர்மா ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 2ஆவது சூப்பர் ஓவரில் 12 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2ஆவது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னாய் வீசினார். முகமது நபி மற்றும் கரீம் ஜனத் களமிறங்கினர். இதில் முதல் பந்தில் நபி ஆட்டமிழக்க அடுத்து குர்பாஸ் வந்தார். அவரும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.