2 வாழைப்பழமும், 1 கப் கோதுமை மாவும் இருந்தா போதும்.. சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்..
உங்கள் வீட்டில் வாழைப்பழமும், கோதுமை மாவும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பணியாரத்தை சுடுங்கள். இந்த பணியாரம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
உங்களுக்கு வாழைப்பழ பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த சின்ன வாழைப்பழம் – 2
* நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்
* கோதுமை மாவு – 1 கப்
* அரிசி மாவு – 1/4 கப்
* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
* உப்பு – 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
* சமையல் சோடா – 2 சிட்டிகை
* தேங்காய் எண்ணெய்/நெய் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, கோதுமை மாவு, அரிசி மாவு, ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் தண்ணீரை ஊற்றி நன்கு மென்மையாக கட்டிகளின்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடல் சமையல் சோடாவை சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், குழிகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* பின்பு ஒரு டம்ளரில் அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, பின் அதை குழிகளில் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பணியாரத்தை திருப்பி போட்டு, மொறுமொறுப்பாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.