ஒரே கல்லில் 2 மாங்காய்… மாதாந்திர போனஸிற்காக ஊழியர்களை ‘ஓட’ விடும் சீன நிறுவனம்! சுவாரஸ்ய பின்னணி
பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களின் உழைப்பு, நன்னடத்தை மற்றும் செயல்திறனின் அடிப்படையில் போனஸ் கொடுப்பது நிறுவனங்களின் வழக்கம். பல நிறுவனங்கள் தங்களுக்கு உண்மையாக உழைக்கும் ஊழியர்களை ஊக்கப்படுத்த மேற்கண்ட அளவுகோல்களை கருத்தில் கொண்டு போனஸ் அல்லது ஊதிய உயர்வு போன்ற வெகுமதிகளை அளித்து வருகின்றன.
ஆனால் இதற்கு விதிவிலக்காக சீனாவை தளமாக கொண்ட காகிதம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கான போனஸை நிர்ணயம் செய்ய ஒரு புதுமையான கொள்கையை வகுத்துள்ளது. டோங்போ பேப்பர் (Dongpo Paper) என்ற அந்த நிறுவனம் புதிய போனஸ் பாலிசியை அறிவித்து தனது ஊழியர்களை வியப்பில் அதே சமயம் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது.
டோங்போ பேப்பர் நிறுவனம் போனஸ் வழக்குவதற்கான அளவுகோலாக செயல்திறனிலிருந்து உடற்தகுதி அதாவது ஃபிட்னஸிற்கு மாற்றியுள்ளது. ஆம், நிறுவனத்தின் புதிய பாலிசி, போனஸை பெறுவதற்கு ஊழியர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த தூண்டி இருக்கிறது. ஊழியர்களுக்கு மாதாந்திர போனஸ் வழங்க டோங்போ பேப்பர் நிறுவனத்தின் தலைவர் லின் ஜியோங் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய கொள்கை, அதன் பணியாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள டோங்போ பேப்பர் நிறுவனம் வழக்கமான போனஸ் கொள்கைக்கு பதில், குறிப்பிடத்தக்க வகையில் இந்த புதிய மாற்றத்தை சமீபத்தில் செயல்படுத்தியது. இந்த புதிய போனஸ் கொள்கையின்படி, ஊழியர்கள் ஒரு மாதத்திற்குள் குறைந்தபட்சம் 50 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் மட்டுமே அவர்களுக்கு முழு மாதாந்திர போனஸ் கிடைக்கும். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, மாதத்திற்கு 40 கிமீ தூரம் ஓடுபவர்கள் 60 சதவிகித போனஸை பெறுவார்கள். அதே சமயம் 30கிமீ தூரம் ஓடினால் 30 சதவிகிதம் மாதாந்திர போனஸ் கொடுக்கப்படும்.
அதே போல மாதத்திற்கு 100கிமீ தூரத்தை ஓடி கடக்கும் ஊழியர்களுக்கு முழு போனஸோடு சேர்த்து கூடுதலாக 30 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய போனஸ் பாலிசியானது மலையேற்றம் (hiking) மற்றும் வேக நடைபயணத்தையும் (ஸ்பீட் வாக்கிங்) கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இவை முறையே தேவைப்படும் மொத்த உடற்பயிற்சியில் 60% மற்றும் 30%-ஆக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலும் தூரத்தை கணக்கிட டோங்போ பேப்பர் நிறுவனமானது ஊழியர்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்துள்ளது. இந்த பிரத்யேக ஆப் மூலம் ஊழியர்களின் ஃபிட்னஸ் ஆக்டிவிட்டி டிஸ்டென்ஸ் கண்காணிக்கப்படும்.
இந்த புதிய போனஸ் பாலிசி சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள டோங்போ பேப்பர் நிறுவனம், ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்த புதிய பாலிசியின் நோக்கம் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. “ஒரு நிறுவனம் அதன் ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது இன்னும் சிறப்பாக மற்றும் நீண்ட காலம் செயல்படமுடியும்” என்று டோங்போ பேப்பர் நிறுவன தலைவர் லின் ஷியோங் கூறியுள்ளார்.
புதிய போனஸ் பாலிசி தங்களுக்கு மனநிறைவை அளிப்பதாகவும், உடற்தகுதியை வளர்த்து கொள்ள ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பாலிசி குறித்து நெட்டிசன்கள் கூறுகையில் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்று குறிப்பிட்டு உள்ளனர். இன் மூலம் ஆரோக்கியம் மற்றும் பண பலன்கள் என இரண்டையும் ஊழியர்கள் பெறலாம் என பாராட்டு தெரிவித்து உள்ளனர்.