இன்று முதல் +2 பொதுத்தேர்வு துவக்கம்: 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்..!

பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதலில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக சுமார் 9 லட்சத்து 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர தனித்தேர்வர்கள் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள் மற்றும் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கும், மீண்டும் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சென்று வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதனம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இன்று தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

பிளஸ்-2 தேர்வை எழுதும் மாணவ-மாணவிகள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மன நல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் பதட்டத்தை தணிக்க எந்தநேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த உதவி எண்ணில் சுமார் 9 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை நீக்கும் வகையில் பயன்பெற்றனர். கடந்த மாதம் சுமார் 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் 14417 உதவி எண்ணில் பேசி மன அழுத்தத்தை நிவர்த்தி செய்தனர். இந்த உதவி எண்ணில் தேவைப்படும் மாணவ-மாணவிகள் தற்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வுக்கு பயப்படும் மாணவ-மாணவிகள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *