அந்நிய செலாவணி கையிருப்பு 2வருட உயர்வு..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் 8ம் தேதி முடிந்த வாரத்தில் 10.47 பில்லியன் டாலர் அதாவது 86,694 கோடி ரூபாய் அதிகரித்து 636.1 பில்லியன் டாலராக (ரூ.5,29,244.7 கோடி) உயர்ந்துள்ளது.
இது ஜூலை 14, 2023ம் தேதி முடிந்த வாரத்தில் பதிவான உயர்வுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். இதற்கு முன்னதாக, மார்ச் 1, 2024ம் தேதி முடிந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 6.55 பில்லியன் டாலர் அதிகரித்து 625.63 பில்லியன் டாலராக இருந்தது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராந்திர புள்ளிவிவர தகவலின்படி, வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCAs) $8.12 பில்லியன் அதிகரித்து $562.35 பில்லியனாக உயர்ந்துள்ளன. டாலர் மதிப்பில் கணக்கிடப்பட்ட இந்த வெளிநாட்டு நாணய சொத்துக்களில், அமெரிக்க டாலர் அல்லாத யூரோ, பவுண்ட் மற்றும் ஜப்பான் யென் போன்ற நாணயங்களின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களும் அடங்கும்.
இதேபோல் ஆர்பிஐ-யின் தங்கம் கையிருப்பின் மதிப்பு 2.3 பில்லியன் டாலர் அதிகரித்து 50.72 பில்லியன் டாலராகவும், SDR க்கள் 31 மில்லியன் டாலர் அதிகரித்து 18.21 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் கையிருப்பு $19 மில்லியன் அதிகரித்து $4.82 பில்லியனாக உள்ளது.
ஆர்பிஐ அறிக்கையில் கவனிக்க வேண்டிய விஷயம், 2021 அக்டோபர் மாதத்தில் இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு $645 பில்லியன் என்ற சாதனை உயரத்தை எட்டியிருந்தது. உலகளாவிய காரணங்களால் ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி இந்தக் கையிருப்பைப் பயன்படுத்தியதால், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வந்தது.
பொதுவாக, ரூபாயின் மதிப்பில் பெரிய அளவிலான சரிவைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது சந்தையின் நாணய புழக்கத்தில் தலையிட்டு, டாலர்களை விற்பனை செய்து பணப்புழக்கத்தையும், ரூபாய் மதிப்பையும் நிர்வகிக்கிறது