2024ல் பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே? – ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய முடிவு
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயர் முன்வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நாடாளுமன்றத்தில் இருந்து 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிவ சேனா உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மைய அம்சங்கள் குறித்து விவாதிக்க திமுக, திரிணாமூல் உள்ளிட்ட மாநில பிராந்திய கட்சிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காலங்களில், கூட்டணியின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு மாநில பிராந்திய கட்சித் தலைவர்கள் தங்களது மாற்றுக் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்த நிலையில், நடைமுறைக்கு உகந்த மாற்று திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். கூட்டணி கட்சிகளுக்கு இடையே பல்வேறு இடர்பாடுகள், முரண்பாடுகள் வந்தாலும், பன்முகமாக வெளிப்படையான உரையாடல்களை மேற்கொள்வதற்கும், பல்வேறு யோசனைகளுக்கு இடமளிக்கும் வகையில் செயல்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஆரோக்கியமான மாற்று அரசியலை சகல மட்டத்தினருக்கும், நிலையினருக்கும் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி பரிந்துரைத்தாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த முன்மொழிவுக்கு மல்லிகார்ஜுன கார்கே தரப்பில் இருந்து ஆர்வமோ எதிர்ப்போ தெரிவிக்காமல், “கூட்டணி கட்சித் தலைவர்கள் பரஸ்பரமாக ஒன்றிணைந்து அரசியல் தளத்தில் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பதுதான் தற்போது மிகவும் அவசியமானது” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 3 மூன்று கூட்டங்களைக் காட்டிலும், இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் பிரச்சாரம், தொகுதிப் பங்கீடு குறித்த வரையறை, சாதகமான வியூகங்களை வகுப்பது தொடர்பாக பிராந்திய மாநிலத் தலைவர்கள் அவசரம் காட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு குறித்த வரையறை உருவாக்க வேண்டும் என்று எடுத்துரைத்தாக கூறப்படுகிறது