2,100 கிலோ ராட்சத மணி, தங்கப் பாதுகை உட்பட அயோத்தி ராமர் கோயிலுக்கு குவியும் பரிசுகள்
அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
ஸ்ரீராமஜென்மபூமி கோயில் அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பொருட்கள் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, சீதையின் பிறந்த மண்ணாகக் கருதப்படும் நேபாளத்தின் ஜனக்புரி ஜானகி கோயிலில் இருந்து 30 வாகனங்களில் 3,000 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கம், வெள்ளியில் தயாரான பாதுகைகள், கண்கவர் துணிகள், ஆபரணங்கள் உள்ளன.
இலங்கையின் அசோக வனத்திலிருந்தும் ஒரு சிறப்புக்குழு பரிசுப் பொருட்களுடன் அயோத்தி வந்துள்ளது. சீதை சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இந்த இடத்திலிருந்து பெரிய பாறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாறையில் சீதை சிறை வைக்கப்பட்ட காட்சிகள் ஓவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதுபோல், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஓரிரு நாட்களில் பரிசு பொருட்கள் வர உள்ளன.
குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீளத்தில் தூபம் போடுவதற்கான குச்சிகள் வந்துள்ளன. தூபம் போடும்போது எழும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் இந்த குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை தலைமை ஏற்று தயாரித்த வதோதராவை சேர்ந்த விஹா பர்வத் என்பவருடன் 18-ம் தேதி இவை வந்து சேரும் என்று தெரிகிறது.
குஜராத் பாஜக அரசு சார்பில் 44 அடி உயர பித்தளை கொடிக் கம்பம், 6 சிறிய கொடிக் கம்பங்கள் நாகரு எனும் மேளம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பூட்டுக்கு பெயர் பெற்ற அலிகர் நகரில் இருந்து சத்ய பிரகாஷ் சர்மா என்ற பூட்டு தயாரிப்பாளர் சிறப்பு பரிசு அனுப்ப உள்ளார்.
அலிகர் அருகிலுள்ள ஏட்டாவில் இருந்து ராட்சத கோயில் மணி தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2,100 கிலோ. தலைநகர் லக்னோவில் இருந்து அலோக்குமார் சாஹு என்ற காய்கறி வியாபாரி வித்தியாசமான கடிகாரம் அனுப்பி உள்ளார். பல நாடுகளின் நேரங்களை ஒரே சமயத்தில் பார்க்கலாம். அயோத்திக்காக 2018-ல்தயாரித்த இந்தக் கடிகாரத்திற்கு அலோக் குமார், இந்திய அரசின் காப்புரிமையை பெற்றுள்ளார்.
சூரத் வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களும் 2 கிலோ வெள்ளிக் கட்டியும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபோல், ராமர் கோயிலுக்கான பரிசுப் பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.