லொறியுடன் வெடித்து அந்தரத்தில் பறந்த எரிவாயு உருளைகள்… காயங்களுடன் தப்பிய 220 பேர்கள்
கென்யா தலைநகர் நைரோபியில் எரிவாயு உருளைகளுடன் லொறி ஒன்று வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 222 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயு உருளைகளுடன் லொறி
குறித்த கோர சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நைரோபியில் உள்ள Embakasi மாவட்டத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் எரிவாயு உருளைகளுடன் லொறி வெடித்துள்ளது.
இதில் சம்பவம் நடந்த பகுதிக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள், வணிக கூடங்கள், வாகனங்கள் என தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தரப்பில் முன்னர் வெளியிட்ட தகவலில், எரிவாயு தொழிற்சாலை ஒன்றில் விபத்து நடந்தாகவே கூறப்பட்டது.
பின்னர் தான், எரிவாயு லொறி வெடித்து, தீ கோளமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. Embakasi மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவிக்கையில், இந்த விபத்தில் சிக்கி சிறார் உள்ளிட்ட இருவர் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அவர் தெரிவித்துள்ளார். எரிவாயு உருளை ஒன்று வெடித்து அந்தரத்தில் பறந்ததில் ஒரு ஆடை மற்றும் ஜவுளிக் கிடங்கைத் தாக்கி, அது தீக்கிரையாகியுள்ளது.
அத்துடன் அந்த தீவிபத்தானது அருகாமையில் உள்ள குடியிருப்பு வளாகங்களிலும் பரவியுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என்றும், இதனால் மீட்புப் பணியை குறைந்தபட்ச இடையூறுகளுடன் மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தரப்பால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.