ஒரே நாளில் 23 விக்கெட்ஸ்.. பிட்ச் எப்படி? கொஞ்சம் வாயை திறந்து பேசுங்கப்பா.. கொந்தளித்த ஆகாஷ் சோப்ரா
நியூலாண்ட்ஸ் : ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள கேப் டவுன் பிட்ச் குறித்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதன்பின் இந்திய அணி களமிறங்கிய நிலையில், 34.5 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இரண்டாவது இன்னிங்ஸில் 98 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது. எய்டன் மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்ஹாம் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 134 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. ஒரு கட்டத்தில் ஆட்டம் ஒரே நாளில் முடிந்துவிடுமோ என்ற சிந்தனைகள் எல்லாம் வர்ணனையாளர்களுக்கு வந்து சென்றது.
ஆனால் தென்னாப்பிரிக்காவில் நடப்பதால், அந்த அணியின் முன்னாள் வீரர் பொல்லாக் கூட, பிட்சில் சீரற்ற பவுன்ஸ் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக பட்டும் படாமல் விமர்சிக்கிறார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், 2 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியா இது? இப்போது மட்டும் பிட்சை பற்றி யாரும் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இந்திய வீரர் மயங்க் அகர்வால், ஒருவேளை இந்திய மைதானங்களில் ஒரே நாளில் 20 விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கொந்தளித்த இந்திய ரசிகர்கள் கேப் டவுன் பிட்ச் குறித்து அதிகமான விமர்சனங்கள் பதிவிட்டு வருகிறார்கள்.