உள்நாட்டில் 28.7%… ஏற்றுமதியில் 36.17 % வளர்ச்சி… இந்திய ஆட்டோமொபைல் துறையின் அபரிவிதமான வளர்ச்சி

இந்திய ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை பல புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் உள்நாட்டு விற்பனையும் ஏற்றுமதியும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளது.

2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் எல்லா பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 18,94,900 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 28.7 சதவிகித வளர்ச்சி ஆகும். அதோடு 4,08,422 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது ஆண்டு வாரியாக கணக்கிடும்போது 36.17 சதவிகித வளர்ச்சியாகும்.

பயணிகள் வாகனங்களை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடும்போது 10.75 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 3,70,786 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது புதிய சாதனையாகும். இதே மாதத்தில் பயணிகள் வாகனத்தின் ஏற்றுமதி 20.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 54,043 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

பயணிகள் வாகனப் பிரிவின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி முகத்தில் இருக்கிறது. இதற்கு முன் இல்லாத வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 3.7 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன என SIAM அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் மேனன் கூறியுள்ளார்.

இரு சக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டால், இதன் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு விற்பனையைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை காட்டிலும் 34.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 15,20,761 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதே காலகட்டத்தில் 3,28,082 மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன. இது 39.5 சதவிகித வளர்ச்சியாகும்.

கொரோனாவிற்குப் பிறகு இந்திய ஆட்டோமொபைல் துறை சரிவிலிருந்து மீண்டு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளனது என்பதை நாம் ஒத்துகொண்டே ஆக வேண்டும். ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்தபடியே இருக்கின்றன. எவ்வளவுதான் வளர்ச்சி இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில எதிர்மறை கருத்துகள் வருவதையும் புறக்கணிக்க முடிவதில்லை.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் கண்காட்சியின் மூலம் கிடைத்த நேர்மறையான தாக்கம் போன்றவற்றால் SIAM அமைப்பு தொடர்ந்து நம்பிக்கையோடு இருந்தாலும், சில சந்தேகங்களை FADA அமைப்பு வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பயணிகள் வாகனப் பிரிவில் சரக்குகளின் இருப்பு நிலை தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. இதனால் டீலர்களுக்கு நிதிச்சுமை ஏற்படாத வகையில் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் சில சீரமைப்புகளை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக FADA அமைப்பின் தலைவர் மனிஷ் ராஜ் சிங்கானியா கூறியுள்ளார்.

எனினும் கிராமப் புறங்களில் இரு சக்கர வாகன விற்பனையும் ப்ரீமியம் ரக வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாலும் இது சந்தையின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *