29 ஆயிரம் போலி நிறுவனம்; ரூ.44,000 கோடி வரி ஏய்ப்பு – மத்திய நிதியமைச்சகம் தகவல்
புதுடெல்லி: போலி இன்வாய்ஸ்களை உருவாக்கி அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் மோசடிகளைத் தடுக்க, மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத் துறை மற்றும் மாநில அரசு அதிகாரிகள் இணைந்து போலி ஜிஎஸ்டி பதிவெண்களை கண்டறிவதற்கான நடவடிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கினர்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
போலி ஜிஎஸ்டி பதிவெண்களை கண்டறிவதற்கான நடவடிக்கை தொடங்கியது முதல் இதுவரை 29,273 போலி நிறுவனங்கள் ரூ.44,015 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரூ.4,646 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதில் 3,802 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.844 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 121 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் போலி நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. வரி ஏய்ப்புசெய்த தொகையின் அடிப்படையில், ரூ.3,028 கோடியுடன் டெல்லிமுதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா (ரூ.2,201 கோடி), உ.பி., (ரூ.1,645 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.