புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த டீம் இந்தியா – நம்பர் 1 இடத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 3ஆவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 319 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 214 ரன்களும், சுப்மன் கில் 91 ரன்களும், சர்ஃபராஸ் கான் 68 ரன்களும் எடுத்துக் கொடுக்க 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக 556 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்திற்கு இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒவ்வொரு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இறுதியாக 122 ரன்களுக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி 2ல் தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 50 புள்ளிகள் பெற்று 59.52 சதவிகிதத்துடன் 2ஆம் இடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வி ஒரு டிராவுடன் 55 சதவிகிதத்துடன் புள்ளிபட்டியலில் 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
நியூசிலாந்து விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 75 சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த போட்டியாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில், நியூசிலாந்து தோல்வி அடைந்தால் மட்டுமே இந்திய அணி நம்பர் ஒன் இடம் பிடிக்கும். மேலும், இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. இதில், இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.