2ஆவது போட்டி கொடுத்த பொன்னான வாய்ப்பு – இந்தியா 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், சுப்மன் கில்லின் சதத்தால் இந்தியா 255 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 104 ரன்களும், அக்‌ஷர் படேல் 45 ரன்களும் எடுத்தனர். பின்னர் 399 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இதில், 3ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்து விளையாடியது. இன்று 4 ஆம் நாளில் இங்கிலாந்து ஒருபுறம் அதிரடியாக விளையாடினாலும் மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இன்றைய நாளில் அக்‌ஷர் படேல், ரெஹான் அகமது விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பிறகு வந்த ஆலி போப் அஸ்வின் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அஸ்வின் பந்தில் நடையை கட்டினார். பும்ரா வேகத்தில் ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து முக்கியமான விக்கெட்டான பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் முறையில் நடையை கட்டினார். பென் ஃபோக்ஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க, டாம் ஹார்ட்லி 36 ரன்களில் கிளீன் போல்டானார். இறுதியாக இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 292 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023 – 2025) புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திலிருந்து முன்னேறி 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதில், முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் தான் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதையடுத்து 2ஆவது போட்டியில் வெற்றி பெற 2ஆவது இடம் பிடித்துள்ளது.

இந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றி, 2ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *