33 ரன்களில் 3 விக்கெட்டுகள் காலி… ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணி தடுமாற்றம்
இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 33 ரன்னில் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களத்தில் இறங்கினர். 3.5 ஓவரில் அணி 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 4 ஆவது பேட்ஸ்மேனாக விளையாடிய ரஜத் பட்டிதார் 15 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
இந்திய அணி 33 ரன்கள் எடுத்திருந்தபோது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரை இழந்திருந்தது. இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்த அனுபவ ஆட்டக்காரர் ஜடேஜா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகிறார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோஹித் 43 ரன்களுடனும், ஜடேஜா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.