33 -3.. இதுக்கு தான் புஜாரா தேவை.. அனுபவமில்லாமல் இத்தனை வீரர்களா.. தவறான முடிவை எடுத்த இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் அனுபவமில்லாமல் களமிறங்கி இருப்பது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய இளம் வீரர்களான சர்பராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். இதையடுத்து ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்த நிலையில், ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த ரஜத் பட்டிதர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதன் காரணமாக பேட்டிங் வரிசையில் 6வது வீரராக களமிறங்கும் ரவீந்திர ஜடேஜா உடனடியாக 5வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஜடேஜாவுக்கு பின் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் என்று இருவரும் அறிமுக வீரர்கள் தான். இதன்படி பார்த்தோமென்றால் இந்திய அணியின் பேட்டிங்கில் மொத்தமாக 5 வீரர்கள் அனுபவமில்லாமல் உள்ளனர். சொந்த மண்ணில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது சரியென்றாலும், ஒரே நேரத்தில் மொத்த மிடில் ஆர்டரும் அனுபவமில்லாத வீரர்களால் நிரப்புவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில் ஃபார்மின்றி தவித்து வரும் சூழலில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சொந்த மண்ணில் இதுதான் முதல் டெஸ்ட் தொடர்.

அதேபோல் ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய மூவருக்கும் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடையாது. இதனை மனதில் வைத்து இந்திய அணி ஒரு அனுபவ வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை புஜாராவுக்கு கடைசி முறையாக வழங்கியிருக்கலாம். அண்மையில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் அபார சதம் விளாசி அசத்தி இருந்தார் புஜாரா.

ஏற்கனவே விராட் கோலி, ரிஷப் பண்ட், முகமது ஷமி, கேஎல் ராகுல் ஆகியோர் இல்லாததை மனதில் இந்திய அணி நிர்வாகம் புஜாராவை அணியில் கொண்டு வந்திருக்க வேண்டும். அனுபவமில்லாத 5 இளம் வீரர்களுடன் களமிறங்கி இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியடைந்தால் அது ரசிகர்கள் மத்தியில் என்னவாக புரிந்து கொள்ளப்படும் என்பதை தேர்வு குழு மற்றும் ராகுல் டிராவிட் அறிந்திருக்க வேண்டும். இதனால் புஜாராவை அணியில் கொண்டு வந்து அவருடன் இணைந்து இளம் வீரர்களை விளையாட வைத்திருந்தால் சரியான முடிவாக அமைந்திருக்கும். பிசிசிஐ செய்த தவறால் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *