2 வீலர் விற்பனையில் 38% உயர்வு… ஆண்டில் தொடக்கத்திலேயே வெற்றி நடைபோடும் சுசுகி!
ஜப்பானிய நிறுவனமான சுசுகியின் இருசக்கர வாகனங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு நன்மதிப்பு உண்டு. இதற்கு காரணம் இவர்கள் தயாரித்து வெளியிடும் வாகனங்களின் தரம் தான் என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தரமான இருசக்கர வாகனங்களை சந்தைக்குள் கொண்டுவரும் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், தற்போது பிப்ரவரி 2024ஆம் மாதத்தின் விற்பனை தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிறுவனம் கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 38% விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பிப்ரவரி 2024-இல் மொத்தம் 97,435 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே 2023-இல் 70ஆயிரத்து 621 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டது. இது உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் மிகப்பெரும் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையின் ஆண்டு வளர்ச்சி 59% அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2024 இல் உள்நாட்டு விற்பனை 83,304-ஆக உயர்ந்து காணப்பட்டது.
இதே முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 52,451 வாகனங்களாக இருந்தது. இருப்பினும், பிப்ரவரி 2024-க்கான ஏற்றுமதி சற்று இறங்குமுகமாக அமைந்துள்ளது. பிப்ரவரி 2023-ல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட 18,170 இருசக்கர வாகனங்களை ஒப்பிடுகையில், தற்போதைய 14,131 என்ற எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
இதுகுறித்துப் பேசிய சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் தேவாஷிஷ் ஹண்டா, “பிப்ரவரி 2024-இல், சுசுகி 10 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்தது. இதனால் ஆலையின் வருடாந்திர உற்பத்தி திறன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சந்தையில் சுசுகி வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு எளிதாக வாகனங்கள் கிடைக்கும். வாங்கும் திறனும் மென்மேலும் வளர்ச்சியைக் காணும். வாடிக்கையாளர் நம்பகத்தன்மையை மையமாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்த வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.
சுசுகி நிறுவனத்தின் அஸ்செஸ் 125, பர்க்மேன் ஸ்டிரீட், அவெனிஸ் 125 ஆகிய ஸ்கூட்டர் மாடல் பைக்குகளே இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்றன. ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபீட்டர் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக நிறுவனத்தின் அஸ்செஸ் ஸ்கூட்டர் பார்க்கப்படுகின்றது. மேலும், இளைய தலைமுறையினரைக் கவர்ந்த ஹோண்டா டியோ, டிவிஎஸ் என்-டார்க் ஆகிய மாடல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அவெனிஸ் 125 சந்தையில் உள்ளது. மேலும், இந்தியாவில் பல சூப்பர் பைக் மாடல்களுக்கு பெயர் போன நிறுவனமாக சுசுகி வலம் வருகிறது. இவர்களின் ஹயாபூசா போன்ற ஸ்போர்ட் பைக்குகள் இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், நிறுவனம் நடுத்தர பட்ஜெட் பைக்குகள் பிரிவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.