தமிழ்நாட்டில் 4 பேர் முதலமைச்சர்கள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாட்டில் தற்போது நான்கு முதலமைச்சர்கள் உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் சூரமங்கலம் அருகே மல்லமூப்பம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியை மேடையேற்றியது மூலம் குடும்ப அரசியல் நடைபெறுவதாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக விமர்சித்த அவர், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருவதாக சாடினார். அதிமுக ஆட்சியின்போது பேரிடர் சூழலில், விலைவாசி உயரவில்லை எனக்கூறிய ஈபிஎஸ், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 40 சதவீதம் விலைவாசி உயர்ந்துள்ளதாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை கொண்டு வர திமுக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சர்வாதிகார ஆட்சி நடத்த திமுக முயற்சிப்பதாகவும் விமர்சித்தார். மேலும், ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பது ஏற்புடையதல்ல என்றும், தமிழ்நாட்டில் தற்போது 4 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர் என்றும் ஈபிஎஸ் விமர்சித்தார்.